ஈரோட்டில் அமித்ஷா ரோடு ஷோ... திமுக அரசின் ஊழலை ஒழிப்போன் என சூளுரை
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பரப்புரை மேற்கொண்டார். இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாமரைப்பாளையம் தனியார் பள்ளி மைதானத்தில் வந்திறங்கிய அமித்ஷா, சிவகிரியில் பிரசாரத்தில் பங்கேற்றார்.

சிவகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, தீரன் சின்னமலை சிலை வரை சுமார் 1 கிமீ தொலைவிற்கு, அலங்கரிக்கப்பட்ட திறந்த வெளி வாகனத்தில் சாலையில் வலம் வந்து மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாஜக.வினர் அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அமித்ஷாவுடன் வேட்பாளர் கிருத்திகா, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வாகனத்தில் சென்று மக்களை சந்தித்தனர். பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளி கும்மி, மல்லர் கம்பம் கலைஞர்கள் வழியில் வரவேற்பளித்தனர். வழியில் இருபுறமும் உள்ள பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பளிக்க, பதிலுக்கு அமித்ஷாவும் பொதுமக்கள் மீது மலர் தூவினார். சிவகிரி தீரன் சின்னமலை அருகே ரோடு ஷோ முடிவில் பிரச்சார உரையாற்றினார்.
அப்போது பேசிய அமித்ஷா, “தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் கூட்டணியாக அதிமுகவுடன் இணைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் போது திமுக அரசின் ஊழல்கள் ஒழிக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது அவை சீரமைக்கப்படும். மோடி தலைமையில் இங்கு புதிய ஆட்சி அமைக்கப்படும் பொழுது தமிழ்நாட்டின் இழந்த சிறப்புகள் மீட்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் தனது மகனை முதலமைச்சராக ஆக்குவது தான். கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். தற்பொழுது அவரது மகன் முதலமைச்சராக இருக்கிறார் அடுத்து அவரது மகன் முதலமைச்சராக வர இருக்கிறார். இது போன்று வழி வழியாக வரக்கூடிய திமுகவால் பயன் இல்லை. மகளிர் உரிமை பெற மகளிர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தோம், ஆனால் அந்த மசோதாவை நிறைவேறாமல் திமுக தடுக்கிறது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் உரிமையை திமுக முறியடிக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 50 சதவீதம் கூடுதல் தொகுதி கொண்டு வர முயற்சி எடுத்தோம், ஆனால் இவர்கள் குறுகிய எண்ணத்தோடு தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது பெண்கள் உரிமை பெற்று விடக்கூடாது என அந்த மசோதாவை தடுக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் மகளிருக்கான உரிமையை தடுத்து சதி செய்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மோடி துணையுடன் இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்றார்.


