“எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”- விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்
எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக ஒவ்வொன்றும் செய்கிறார் என்று நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரி மாநில பாஜக சார்பில் தேர்தல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக விஜய்க்கு நான் கூறும் அறிவுரை, பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக ஒவ்வொன்றும் செய்கிறார். எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்ப்பு, எதிர்ப்பு என விஜய் பேசினால் ராகுலுக்கு என்ன நடந்ததோ அது தான் நடக்கும். 95-வது தேர்தலில் ராகுல் தோற்றுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி துவக்கி 200-க்கும் மேற்பட்ட தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளார். விஜய் உடையதும் புதிய கட்சி என்பதை விஜய் உணர வேண்டும். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. பீகாரை போல் கூட்டணி அமைப்போம். நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும் போது, என் ஆர் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தனது கோரிக்கை எதுவும் நிறைவேற்றவில்லை. தனது கோப்புகளுக்கு ஆளுநர் கைலாசநாதர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று மன வருத்தத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் உங்களது கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு, இது குறித்து பாஜக தலைவர் ராமலிங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளூர் தலைவர்கள் பேசுவார்கள் என்று கூறி நழுவினார்.


