ஓபிஎஸ்-ஐ திடீரென சந்தித்த பாஜக அண்ணாமலை; காரணம் என்ன?

தமிழக அரசின் அனுமதியின்றி கேரள அரசு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்ததாகவும் தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்ததாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிவித்திருந்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாநில மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கேரள அரசிடம் ஸ்டாலின் சரணடைந்து விட்டார். தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார். ஸ்டாலின் சினிமாவில் வருவதை போல கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து காமெடி செய்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
போராட்டம் முடிந்த பிறகு அங்கிருந்து பெரியகுளத்திற்கு சென்ற அண்ணாமலை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து நாளை 5 மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.