தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்- பாஜக

 
Annamalai Annamalai

நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DMK Has Never Come To Power Without An Alliance', Says Annamalai In Retort  To Stalin's Remarks

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ‘தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்’ என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் தமிழகத்தின் மொத்த கடன் சுமையை 7,26,028 கோடிக்கு எடுத்து சென்று மாபெரும் சாதனையை திறனற்ற திமுக அரசு புரியவுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் மொத்த கடன்தொகை நமது நாட்டின் தற்போதைய வெளிக்கடனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். அதோடு ‘தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று மடைமாற்றாமல், திமுக தனது தேர்தல் வாக்குறுதியான ‘அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று கூறியதை நினைவில் கொண்டு  தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின்  உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதி குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. சிதிலமடைந்து இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாடு குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதில் முனைப்புடன் இருக்கும் அரசு தற்போதுள்ள உள்கட்டமைப்பை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
 
எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பினில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியறிவும் எண்கணித திறனும் உயர கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பயனளிக்கிறதா என்று அரசு ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும். 2022ஆம் ஆண்டுக்கான ASER அறிக்கையின் படி தமிழகத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியில் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அரசு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அறிவிப்புகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிதிலமடைந்து கிடக்கும்  பள்ளி கட்டிடங்களை சரி செய்ய போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Verbal spat between Tamil Nadu CM Stalin, BJP chief Annamalai over fuel VAT  - India Today
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் பக்தர்களின் நன்கொடையில் கட்டப்பட்டவையாகும். அதை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வது தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து, இது போன்ற வீண் முயற்சிகளை கைவிட வேண்டும்.
 
தொழில் சார்ந்த திறன் பயிற்சிகள் குறித்து விவரித்த நிதிநிலை அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி விட்டதா ? என்பதை குறிப்பிட தவறிவிட்டது. ‘ஆண்டுக்கு 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்பு மற்றும் 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவுகளை கூட வெளியிட முடியாமல் இளைஞர்களை ஏமாற்றி வருகிறது திறனற்ற திமுக அரசு.
 
திமுக ஆட்சிக்கு வந்தப்பின் புதிதாக 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தனர். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 11 கல்லூரிகளுக்கு நிலம் கூட கையகப்படுத்தவில்லை என்ற செய்தி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், இந்த 21 கல்லூரிகளுக்கு தேவையான கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் குறித்து 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லையே ஏன்? புதிய கல்லூரிகள் கட்டுவதற்கான திட்டம் கைவிடப்பட்டதா என்பதை  அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
 
சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அமைப்போம் என்று அறிவித்து அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதே திறனற்ற திமுகவின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சம். நிதிநிலை அறிக்கையில் உள்ள பல அறிவிப்புகள் இவ்வாறே உள்ளன.
 
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனி சட்டம் இயற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். காலம் தாழ்த்தாமல் இந்த சட்ட முன்வடிவை இயற்றவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
 
‘கோவில்களின் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் செலவிடப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவேதும் செய்யாமல் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கோவில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு ஏதும் இடம் பெறவில்லை.

Annamalai
 
மொத்த வருவாய் செலவீனங்கள் 2022-23 ஆம் நிதி ஆண்டில் 2,84,188 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2022-23ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்த வருவாய் செலவீனங்கள் 2,76,135 கோடி ரூபாய் மட்டுமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சென்ற ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் வருவாய் பற்றாக்குறையை முன்பை விட குறைத்து விட்டோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
 
1) கல்வி கடன் ரத்து
2) பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு
3) 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்வு
4) சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்
5) மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 8000 ரூபாயாக உயரும்
6) சாத்தியமே இல்லாத பழைய ஓய்வுதித்ய திட்டம் அமல்படுத்தப்படும்
7) மகளிருக்கு உரிமை தொகை
8) 70 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படாத நகைக்கடன் ரத்து
9) 3.5 லட்ச பேருக்கு அரசு வேலைவாய்ப்பு
10) 1000 கோடி ரூபாய் செலவில் கோவில்கள் புனரமைப்பு
11) புதிதாக 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
 
போன்ற முக்கிய வாக்குறுதிகள் எவற்றையும் சென்ற ஆண்டு நிறைவேற்றாமல், ‘வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது’ என்று எப்படி சொல்ல முடியும் ? சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என்று மக்களை வருத்தி வருவாய் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று மார்தட்டிக்கொள்வதா?  
 
மேலும், இந்த வருடம் வருவாய் பற்றாக்குறை குறைவதற்கு முக்கிய காரணி டார்கெட் வைத்து செயல்படும் சாராய அமைச்சர் தான். 36,013 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை ஓரே ஆண்டில் 45,000 கோடிக்கு எடுத்து சென்றதோடு அடுத்த நிதி ஆண்டில் 50,000 கோடி வசூலித்து தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.