பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நடக்கவில்லை- அண்ணாமலை
பாஜக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் கூட நடக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க என் மண் என் மக்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பழனி தொகுதியில் கொடைக்கானலில் இன்று நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை நாயுடுபுரம் பகுதியில் துவங்கி மூஞ்சிகல்லில் நிறைவு செய்தார்.
மூஞ்சிகல்லில் பாஜகவினரிடையே பேசிய அண்ணாமலை, “ஜி-20 மாநாட்டை நடத்தி 40க்கும் மேற்பட்ட உலக தலைவர்களை வரவழைத்து இந்தியா முன்னேற்றத்திற்காக மோடி பாடுபட்டார். 78 ஒன்றிய அமைச்சர்களை வைத்திருந்தும் பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட நடக்கவில்லை. சனாதனம் என்பது மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றிய ஒரு தர்மம் ஆகும் ... சனாதானத்திற்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை. சனாதனம் குறித்து ஆங்கிலேயரும் , திமுகவினருமே 70 ஆண்டுகளாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை பாஜக பிடித்து ஆட்சி அமைக்கும். பாஜக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் கூட நடக்கவில்லை” என்றார்.