ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை ஏவி விட்டது யார்?- அண்ணாமலை
காமராஜர் பிறந்த நாளை ஒட்டி சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் அவரது படத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “காலை உணவுத் திட்டத்தை திராவிட மாடல் திட்டம் எனக் கூற முடியாது. மாணவி, மாணவியருக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் இடம்பெற்றிருந்தது. புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு கொண்டு வர வேண்டும். காலை உணவு திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு. வெறும் சாப்பாடு, இட்லி, தோசை இல்லை... முட்டை, சிறு தானியங்கள் என ஊட்டச்சத்து உணவுகளும் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும்.
நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வில் நடந்த தவறுகள் சரி செய்யப்படுகிறது நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை. பூட்டிக்கிடந்த 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தவர் காமராஜர். காமராஜரின் ஆட்சிக்கு பின்னர் தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது.ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை ஏவி விட்டது யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.