ஆதவ் அர்ஜுனாவை நீக்கிவிட்டோமென திருமா கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- அண்ணாமலை
மணிப்பூர் விவகாரம் மட்டும் போதாது, அரசியல் பயணத்தில் நிறைய தூரம் உள்ளதால், அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.

நாகையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் ஜனநாயகம் குடும்ப ஆட்சியின் பிடியில் உள்ளது. மன்னர் ஆட்சியை துடைத்தெறியும் காலம் வந்துவிட்டது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் என முதலில் கூறியது நான்தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த சமுதாயம் வேகமாக முன்னேறும். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சீனாவிடம் உற்பத்திக்கு தேவையான அனைத்தும் அவர்களிடம் உள்ளது. எனவே அதுபோல் இந்தியாவுக்கு மூலப் பொருட்கள் தேவை என்பதால், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு கேட்டபோது தமிழக அரசு எந்த இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைக்க பார்க்கிறார். சட்டமன்றத்தில் நடைபெறுவது, மக்களுக்கு உண்மை தெரியும் அளவிற்கு விவாதமாகி உள்ளது.
விசிக கட்சியில் எழுந்துள்ள பிரச்சனையை பாஜகதான் வெளியில் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுகிறது என்பதையும் மக்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆதவ் அர்ஜுனாவை நீக்கிவிட்டோமென திருமா கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீங்களே மற்ற கட்சிகளுக்கு ஆள் அனுப்பி பாத்திரத்திற்கு ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்பது போன்ற மாயையே இங்கு உருவாக்கி உள்ளனர். தமிழக பாஜக வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு 24, மணி நேரத்திற்குள் 954 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டுமென பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் மாநில அரசு அதை காப்பி அடித்து போட்டிபோட நினைக்கிறது. தவெக தலைவர் விஜய் அரசியல் பாதையில் பயணிக்கும் போது அனைத்தையும் பார்க்க வேண்டும், மணிப்பூர் விஷயத்தை மட்டும் கத்துக்கொண்டால் போதாது, அனைத்தையும் தெளிவாக கவனிக்க வேண்டும்” எனக் கூறினார்.


