எடப்பாடி அண்ணன் முடிவே இறுதியானது... விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை- அண்ணாமலை

 
annamalai

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மையப்படுத்தி மூன்று முறை பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாளை தமிழ்நாட்டில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.


கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அதிமுக விஜயபாஸ்கர் பிரச்சாரத்தை முழுவீச்சில் செய்து வருகிறார். நாளை கோயம்புத்தூரில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. நாங்கள் ஒரு கூட்டணியாக கட்டுக்கோப்போடு மிக வலிமையாக களத்தில் பணியாற்றி வருகிறோம். மூன்று முறை பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலைப்படுத்தி கூட்டம் நடைபெற்றது. திமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பு கிடையாது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், மதுரையில் நயினார் நாகேந்திரன் அவர்களும் இது போன்ற  டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஆகியோர் ஒவ்வொரு பகுதிகளில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  தலைமை தாங்கி பங்கேற்க  உள்ளனர். நேற்றுடன் கரூரில் திமுக அட்டூழியம் குறைய வேண்டுமென எதிர்பார்க்கிறோம். மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி-யும் ஒரு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் நடந்தது போல, கரூரிலும் பொதுமக்களை அடைத்து வைப்பதற்காக உணவகங்கள் பெயரில் 60 முதல் 70 பட்டிகள் வரை தயார் நிலையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலம் இதுகுறித்த புகாரினை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். திமுக அலுவலகத்திற்கு போஸ்ட்மேன் போனால் கூட கூட்டணி வைப்பார்கள் போல, பெரிய கூட்டணி அமைத்தது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட், விசிக பேச்சு வார்த்தையில் பிரச்சனை உள்ளது. அதைப் பற்றி பேசாமல் 24 மணி நேரமும் விஜய்க்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். 

தேர்தல் ஆணையம் கூறியது போல பொதுமக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இருந்தால் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். 2021 தேர்தல் போலவே 2026லும் 36 நாட்கள் உள்ளது. ஜோதிமணிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தோல்வி பயத்தில் இருக்கிறார். 2022க்கு பிறகு ராகுல் காந்தி இதுவரை எத்தனை முறை தமிழ்நாடு வந்துள்ளார். தேர்தலுக்கு மட்டும் வருவது டூரிஸ்டர்கள் செய்யும் வேலை. கரூர் சம்பவத்தின் போது அரசு மருத்துவமனைக்கு உதவி செய்வதற்காக முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால், செந்தில் பாலாஜி திமுக மருத்துவர் அணி என்று ஆம்புலன்ஸ்களை கூட்டிக்கொண்டு, நேரலையில் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார். விளாத்திகுளம் உடற்கூராய்வு ரிப்போர்ட் இதுவரை வரவில்லை. ஆனால், கரூர் சம்பவத்தில் உடனடியாக வழங்கப்பட்டது. கரூரில் 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் செருப்பு வீசப்பட்டது. செந்தில் பாலாஜி நாளை சிபிஐ விசாரணைக்கு செல்கிறார். கடந்த ஒரு வாரமாக பதட்டத்தில் இருக்கிறார். முதலில் சிபிஐ விசாரணை முடிந்து வரட்டும். விஷக்கிருமி தனமான அரசியலை செந்தில் பாலாஜி கரூரில் தொடங்கி மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல பார்க்கிறார், அது கரூரிலேயே திரும்ப முடிவுப்பெற வேண்டும். விஜயுடனான கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை  யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதுதான் இறுதி கருத்து. அவர்தான் முதல்வர் வேட்பாளர், அவரது கருத்துதான் இறுதி கருத்து.” என்றார்.