'அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி’- மாணவி வன்கொடுமை வழக்கில் அண்ணாமலை பகீர் சந்தேகம்

 
Annamalai Annamalai

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது.  உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?


அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை தமிழக பாஜக இதனை விடப் போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.