மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம்- அண்ணாமலை

 
கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் - அண்ணாமலை கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் - அண்ணாமலை

பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

aNnamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின். இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு, தனது வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். மேலும், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பல திட்டங்களை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.


மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் ஏழு மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் இன்றி வேறென்ன? தமிழகம் முழுவதும், அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருகின்றன. திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று கூறுகிறார் முதலமைச்சர். பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என்பதை, முதலமைச்சர்தான் கூற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.