மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்

 
Annamalai Annamalai

ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

annamalai mkstalin

இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. 


அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி  தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம். ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.