“பாஜக தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது”

 
“பாஜக தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது”

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சமூக வலைதளத்தில் கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என தூத்துக்குடி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தெரிவித்துள்ளார்.

Tamilisai

இதுதொடர்பாக தினேஷ் ரோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க எப்போதும் ஜனநாயகத்தை முன்னிறுத்தும் கட்சி. தலைவர்களின் கருத்தை முடக்குகிறோம் என்ற பெயரில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மாநில தலைவராக இருந்தபோது அண்ணன் H ராஜா, அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்கள் கூட தங்களுடைய மாற்றுக் கருத்துக்களை ஊடகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் மிகவும் கீழ்த்தரமாக உருவ கேலி செய்தனர் ஆனால் ஒரு பெண்ணாக அதை எல்லாம் எதிர்கொண்டு அரசியலில் சாதித்திருக்கிறார். ஒரு தலைவர் தன்னுடைய மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தினாலே அவர்கள் மீது தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது கட்சியின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல். பாரதிய ஜனதா கட்சி ஒரு குடும்ப கட்சி அல்ல. ஒரு குடும்பமாக செயல்படும் கட்சி. ஒரு குடும்பத்திலேயே பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் போது அரசியலில் அது மிக சாதாரணம். அக்கா தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மாநிலத் தலைவராக இருந்தபோதே "கழகங்கள் இல்லா தமிழகம் கவலையில்லா தமிழர்கள்" என்ற கோஷத்தோடு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று உரக்கச் சொல்லி அவர் பயணித்த பாதையில் தான் நாம் இன்றும் பயணிக்கிறோம்.

நம்முடைய மாநில தலைவர் அண்ணன் திரு அண்ணாமலை அவர்கள் திராவிட கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். மாநிலத்தின் தலைவராக எதை எப்படி அணுக வேண்டும். கட்சிக்கு எது நல்லது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படக்கூடியவர். எதையும் சமாளிக்கக் கூடியவர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பன்புள்ளவர். கடந்த காலங்களில் உட்கட்சி விவகாரங்களை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு கேடயங்கள் தேவையில்லை. கடினமான கால கட்டத்திலும் கூட பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் வளர்த்தெடுக்க அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் பணி அளப்பரியது. தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார். நேசக்கரம் நீட்டி அவரை வரவேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.