விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்- ஹெச். ராஜா
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை சந்தித்ததை நான் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 7ம் வீதியில் பிரசித்தி பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்காக அங்கு நடைபெறும் கோயில் திருப்பணிகளை பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் ஹெச். ராஜா, “தமிழ்நாட்டில் இருக்கும் அரசு ஊழல், ஊரல், போதை அரசாங்கம். இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை நாசமாய் போய்விடும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் சிந்தடிக் ட்ரக் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது, சிந்தடிக் ட்ரக்கை இதுவரை தமிழ்நாடு காவல்துறை கைப்பற்றியுள்ளதா மத்திய புலனாய்வு அமைப்புதான் இதனை கைப்பற்றி வருகிறது.
அமலாக்கத் துறையின் செயல்பாடு சரிதான் என்று கோடைகால விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடருமானால் அடுத்த தலைமுறை நாசமாகி போய்விடும். தமிழ்நாட்டின் தலைமை ஹாஜி உயிரிழப்பிற்கு பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதை தான் மைய புள்ளியாக உள்ளது, குறிப்பாக தமிழ்நாட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் அரசு அலுவலக உயர் அதிகாரிகள் ஆகியோரின் உறவினர்கள் குடும்பத்தினர் படிக்கும் பள்ளிகள் முன்பு தான் சிந்தடிக் ட்ரக் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது . கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதல்வர் செல்லவில்லை, இந்த வருடமாவது முதல்வர் கூட்டத்திற்கு சென்று உள்ளாரே என்பது குறித்து நான் பாராட்டுகிறேன்.
நடிகர் விஜய் எதற்காக கட்சி தொடங்கியுள்ளார் என்பதை அவர் விளக்க வேண்டும், ஏனென்றால் அவர் கூட்டங்களில் தேச பக்தராக இருந்த வேலு நாச்சியார் படத்தையும் போட்டு உள்ளார். தேச துரோகியாக குற்றம் சாட்டப்படும் பெரியார் படத்தையும் போட்டுள்ளார். இவர் எந்த அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார். தமிழ்நாடு அரசு லஞ்சம் கேட்டால் எந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் இருக்கும் அதை முதலில் கேளுங்கள்” என்றார்.


