ஸ்டாலின், உதயநிதி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கக்கோரி பாஜக கடிதம்!
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு பாஜக கடிதம் எழுதியுள்ளது
இதுதொடர்பாக தமிழக பாஜக செயலாளர் அஷ்வத்தாமன் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் மதிக்கப்படும் அரசியல் சாசனப் பதவியை அவமதிக்கும் வகையில், தங்களுக்கு எதிரான இழிவான, இனவெறி கருத்துக்கள் பரப்பி வருவதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (பி.என்.எஸ்.எஸ்) பிரிவு 218 (நீதிபதிகள் மற்றும் அரசு பொது ஊழியர் மேலான வழக்கு) கீழ் அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என்று பதிவிட்டிருந்தார்.
ஓராண்டுக்கு முன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தங்களின் உயரிய மாண்பினை குலைக்கும் வகையில் தரக்குறைவாக பேசிய வீடியோ, தற்போது, அவர்களுடைய கட்சியினரால், சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலினின் பேசியதாவது: "ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி. எவ்வளவு திமிர்? அவருக்கு எவ்வளவு கொழுப்பு? நான் உங்களிடம் கேட்கிறேன் திரு ஆளுநர் அவர்களே, 'நீங்கள் யார்?' உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நான் ஆளுநரிடம் கேட்கிறேன், 'நீங்கள் யார்?' நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு தபால் காரர் மட்டுமே. நமது முதலமைச்சர் பகிர்ந்துள்ள விஷயங்களை மத்திய அரசுக்கு வழங்குவது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால் காரர் மட்டுமே. நாங்கள் மரியாதை கொடுத்தால், நீங்கள் அதைத் தாண்டி செல்கிறீர்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், அவர் ஆர்.என்.ரவி அல்ல, இனிமேல் அவர் ஆர்.எஸ்.எஸ். ரவி. எங்கள் தமிழ் மக்களிடம் சென்று உங்கள் சித்தாந்தத்தை சொல்லுங்கள். அவர்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள்".
மேற்கண்ட விஷயங்கள் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் குற்றமாகும். குறிப்பாக, 151 பாரதிய நியாய சட்டம் (எந்தவொரு சட்டப்பூர்வ அதிகாரத்தையும் தடுக்க அல்லது தடுக்கும் நோக்கத்துடன் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலியவர்களை தாக்குதல்) மற்றும் பாரதிய நியாய சட்டம் பிரிவுகள் 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல் மூலம் கலவரம் ஏற்படுத்த முயற்சித்தல்), 196 (மதம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல்) 352 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 353 (2) (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்), 356 (அவதூறு) ஆகிய பிரிவுகளின் கீழான குற்றங்களை இவர்கள் புரிந்துள்ளனர். பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 218ன் கீழ் அவர்கள் பொதுப் பதவிகளில் அதாவது முதல்வர், துணை முதல்வர் பதவிகளை வகிப்பதால் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு உங்கள் அலுவலகத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்-தேவையான நிபந்தனை உள்ளது. எனவே, மேலே குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (பி.என்.எஸ்.எஸ்) பிரிவு 218 (நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் வழக்கு) கீழ் அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.