பொய்கள் பரப்புவதை மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன் கண்டனம்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதியை சீர்குலைக்கும் ஊழல், வாரிசு அரசியலில் மூழ்கி திளைக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். ஆனால், அவற்றையெல்லாம் அவரது கட்சியினரே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கழித்து, 50 சதவீதத்திற்கும் குறைவான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கியுள்ளது. 'சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று' என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாகவே வைத்திருக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், பிரதமர் சொன்ன ரூ. 15 லட்சம் என்ன ஆச்சு என்று, கொஞ்சமும் கூச்சமில்லாமல் திரும்ப திரும்ப பொய்யை பரப்பி வருகிறார். ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்பதில் நம்பிக்கை கொண்ட கட்சியான திமுகவிடம் நேர்மை, நியாயம், உண்மையை எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றுதான், 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வானதி சீனிவாசன்

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே பிரதமர் மோடி அப்படி பேசினார். ஆனால், இதை சுட்டிக்காட்டிய பிறகும் திரும்ப திரும்ப முதலமைச்சராக இருக்கும் ஒருவரே பொய்யை பரப்பி வருகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான், பிரதமர் மோடி ரூ. 15 லட்சம் தருவதாக சொன்னாரே என்ன ஆச்சு என்று திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருநாள் விடாமல் அவதூறு பரப்பிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அதற்கு 2019 தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். 2014 தேர்தலைவிட, 2019ல் 20 எம்பிக்களை பாஜகவுக்கு அதிகம் தந்தனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதுதான் நடக்கப் போகிறது. அது தெரிந்துதான் விரக்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பி வருகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளால்தான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் மாறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் உலகமே கணித்துள்ளது. மோடி ஆட்சியில்தான் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர், கழிவறை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு, வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சாதத்தியமாகி இருக்கின்றன.

உண்மை இவ்வாறிக்க திரும்ப திரும்ப மோடி ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். ஆனால், மக்கள் உண்மையை அறிவார்கள். அதனால்தான் மோடியை மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்கிறார்கள். நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பு பிரசாரம் செய்து வரும் கட்சி திமுக. அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், இந்து மத பண்டிகைகளுக்குகூட வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு மனதில் இந்து மதத்தின் மீது வெறுப்பை வைத்திருக்கும் ஸ்டாலின், பாஜகவை பார்த்து வகுப்புவாதம் என்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சியில் முறைகேடுகளை சி.ஏ.ஜி., அம்பலப்படுத்தி விட்டது என இப்போது மைக் கிடைக்கும் போதெல்லாம் அவதூறு பரப்பி வருகிறார். மத்திய அரசு திட்டங்களுக்கு, தொடக்கத்தில் ஒதுக்கப்பட்டதைவிட அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதைதான் சி.ஏ.ஜி., அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திட்டங்கள் தொடக்கத்தில் திட்டமிட்டதைவிட, பல்வேறு மாறுதல் செய்யப்பட்டதால் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.


இது ஊழல் அல்ல என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல், பொது மேடைகளில் அவதூறு பரப்பி வருகிறார். ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஏனெனில் திமுகவில்தான் வழக்கறிஞர் அணியை பலமாக வைத்திருக்கிறார்கள். பல வழக்கறிஞர்களுக்கு எம்பி பதவி கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், அவரே பொய்யை பரப்பி வருகிறார். திமுக முதல் குடும்பத்தின் ஊழல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதனாலேயே அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசினார்கள். ஏனெனில் யார் ஊழல்வாதிகள் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பொய்கள் பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.