பண அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்துக் கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் என தெரிவித்துள்ளார்.
கோவை நெசவாளர் காலணி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இறகுப்பந்து மைதானத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அமைத்துக் கொடுத்துள்ளார். இன்று அதனை ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் அங்கு இறகு பந்து சிறிது நேரம் விளையாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், இறகு பந்தாட்டம் மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் கால நிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகிறது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாம் மேற்கொள்ளவில்லை. தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளார். மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடாக உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார். பண அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி பேச்சை நான்கு நாட்களாக கவனித்து வருகிறோம். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது” என்றார்.