"உதயநிதிக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?"- வானதி சீனிவாசன்
மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுகிறது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “அப்போதைய முதல்வர் கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது மகனை துணை முதலமைச்சராக்கினார். தற்போது துணை முதலமைச்சருக்கான அவசியம் ஏன்?.. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.. தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனரா? மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சரின் மகன் என்ற ஒரு காரணத்தை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா? உதயநிதியின் பணியை வைத்து மக்களே முடிவு செய்வார்கள். ஜாமீன் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி நேர்மையான அரசை கொடுக்க முடியும்?
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். திராவிட மாடல் என்றால்.. வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல். தங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கே பதவி என்பதே தமிழக மக்களுக்கு திமுக சொல்லும் செய்தி. எதிர்க்கட்சி என்ற முறையில் நான் இதை கூறவில்லை. மக்கள் மனதில் உள்ளதையே சொல்கிறேன்” என்றார்.