கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு- வானதி சீனிவாசன்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதாக என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈஷாவில் நடக்கும் சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பேரார்வத்துடன் வந்து குவிகிறார்கள். ஆதியோகி சிலை, தியானலிங்கம், லிங்கபைரவி ஆலயத்தை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஈஷாவில் யோகப் பயிற்சி பெற்று உடல், மனதிற்கு புத்துணர்ச்சி பெற்று பயன் பெற்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

ஈஷா நடத்தும் உழவர் உற்பத்தி குழுக்கள் இயற்கை வேளாண்மையில் பெரும் புரட்சியை செய்து கொண்டுகிறது. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு பயிற்சியும், தேவையான உதவிகளையும் செய்து வருகிறது இப்படி ஈஷா யோக மையத்தையும்,. அதன் நிறுவனர் சத்குரு அவர்களை நோக்கியும் பல லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுவது, இந்து மத எதிர்ப்பாளர்கள், பிரிவினைவைாதிகளின் கண்களை உறுத்துகிறது. அதனால்தான் ஈஷா யோக மையம் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எந்தவொரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் ஈஷாவின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் சென்று ஈஷாவில் சோதனை நடத்தியுள்ளனர்.

ஈஷா

ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது ஈஷா யோக மையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அன்றைய வனத்துறை அமைச்சரால், யானை வழித்தடத்தை ஈஷா யோக மையம் ஆக்கிரமித்துள்ளதற்கான ஆதாரத்தை காட்ட முடியவில்லை.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனாலும், ஈஷா யோக மையம், யானை வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பும் இல்லை. கோவை மாவட்டத்திலேயே யானை வழித்தடம் (Elephant corridor) என்ற ஒன்றை இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. அறிவிக்காத ஒன்றை, மீறினார் என்று ஒருவர் மீது எப்படி குற்றம்சாட்ட முடியும்?

கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர். துறவு என்பது தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது - துறவு என்பது இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கம். கோவை ஈஷா யோக மையத்தில் துறவிகளாக உள்ள, தனது இரு மகள்களை மீட்கக்கோரி, பேராசிரியர் காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'ஈஷா யோக மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க' உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈஷா யோக மைய வளாகத்தில் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். காவல் துறை அதாவது திமுக அரசின் இந்த அத்துமீறல் குறித்து ஈஷா யோக மையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதைத் தொடர்ந்து துறவிகளாக உள்ள இரு பெண்களிடமும் காணொலிக் காட்சி மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது, 'தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே துறவிகளாக இருக்கிறோம்' என அவர்கள் தெரிவித்தனர். உண்மையை தெரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமே நடத்துவதாக அறிவித்தது. தற்போது, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சனாதன தர்மம் அதாவது இந்து மதத்தின் ஓர் அங்கம் தான் துறவு. இந்து மதம் எந்த இடத்திலும் பெண்களை மறுதலிக்கவில்லை. மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் இறைவனை அடைய இந்து மதத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. யாணை, சிலந்தி, பறவைகள் கூட மோட்சம் அடைந்துள்ளன. ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்குகூட தடை இல்லாத ஞான மார்க்கம் இந்து மதம்.

வானதி

ஈஷா யோக மையம் கோவை, தமிழகம் ஏன் இந்தியாவை தாண்டி உலக அளவில் முக்கியமான ஆன்மிக மையமாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைவர் சத்குரு. ஆன்மிகம் மட்டுமல்லாது, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சேவை பணிகளில் ஈஷா யோக மையம் ஈடுபட்டுள்ளது. மற்ற மத நிறுவனங்கள் மீது எத்தனை எத்தனையோ புகார்கள் வருகின்றன. அங்கெல்லாம் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் மதமாற்றம் பெரும் வணிகமாக நடக்கிறது. மதமாற்றுவதற்காக பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இந்து மத சடங்குகள். சம்பிரதாயங்களை கேலி, கிண்டல் செய்கின்றன. அவர்கள் மீதெல்லாம் புகார் அளித்தாலும் திமுக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.


தனது பிள்ளைகள் திருமணமாகி பேரக்குழந்தைகளை பெற்றுத்தர வேண்டும் என்றே அனைத்து பெற்றோர்களும் நினைக்கின்றனர். திருமண வாழ்க்கை மட்டுமே உயர்ந்தது. துறவு என்பது உயர்ந்த நிலை அல்ல என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. அடுத்தவரின் மகனோ, மகளோ காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அனைவரும் தயாராக இருக்கிறோம். நம் குடும்பத்தில் ஒருவர் துறவியானால் மனம் ஏற்பதில்லை. ஈஷாவின் நிறுவனர் சத்குரு அவர்கள், தனது மகளுக்கு திருமணம் செய்திருக்கிறார். ஆனால், மற்ற பெண்களை துறவியாக்கிறார் என்ற வாதமே தவறானது. ஏனெனில் ஆன்மிகப் பாதை என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது. இந்த கேள்வி என்பதே சனாதன தர்மத்திற்கு, பாரத நாட்டின் இயல்புக்கு எதிரானது.

பல நேரங்களில் நீதிபதிகளின் ஒற்றை கேள்வி மட்டுமே பலரின் கவனத்திற்குச் செல்கிறது. அந்த வழக்கின் முழுமையான விவரங்கள் மக்களைச் சென்று சேருவதில்லை. இது போன்ற கேள்விகள் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் சனாதன தர்மத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும். சனாதன தர்மத்தில் அதாவது இந்து மதம் என்பது, பெண்கள், ஆண்கள், விவகாரத்து ஆனவர்கள், கணவரை இழந்தவர்கள் என அனைவரையும் ஏற்கும் சமத்துவம், சமூக நீதி மதம். ஈஷா யோக மையம் போன்ற அமைப்புகள் அனைத்துத் தரப்பினரையும் சனாதனத்தை நோக்கி ஈர்க்கிறது என்பதால் அதை ஒழித்துக் கொண்ட முயற்சிக்கிறார்கள். சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.