திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலாஜி, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. மருந்து பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களும், நோயாளிகளும் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவற்றையெல்லாம் திமுக அரசு சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் அச்சத்துடன் பணியாற்றினால் அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்படுவார்கள். திமுக அரசு இதை உணர்ந்து, அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.