திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள்- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

“சில அமைச்சர்களை அனுப்பி அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகம்”- வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. அத்துடன், ஒரு நாளில் மட்டும் சென்னை, ஓசூர், தேனி, தென்காசி என மாவட்ட வித்தியாசமின்றி பல இடங்களில் போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ள செய்தி தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.


பிஞ்சுக்குழந்தைகளின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத அளவிற்கு திறனற்றுவிட்டதா தமிழக காவல்துறை? இன்னும், எத்தனை கண்டன அறிக்கைகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்? விளம்பரத்திற்கு முக்கியத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பாராமுகம், இது தான் திராவிட மாடலின் கோர முகமா? சட்டம் ஒழுங்கை சீரழித்துவிட்டு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, அப்பா என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படும் இந்த திறனற்ற திமுக ஆட்சியை விரைவில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் தூக்கியெறிவர் என்பது உறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.