சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத பாஜக எம்.பி., செல்வகணபதி..

 
சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத பாஜக எம்.பி., செல்வகணபதி.. 

ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு புதுவை பாஜக எம்.பி., செல்வகணபதி இன்று ஆஜராகவில்லை. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் அவகாசம் கேட்டு செல்வகணபதி கடிதம் அனுப்பியுள்ளார். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரூ. 4 கோடி  பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பணத்துடன் 4 பேர் பிடிபட்டனர்.  அவர்களில்  சதீஷ் என்பவர் நயினார் நாகேந்திரனின்  ஹோட்டலில் பணிபுரிந்து வந்த நபர் ஆவார். நெல்லை தொகுதியில்  பாஜக வேட்பாளராக போட்டியிட்ட  நயினார் நாகேந்திரனின் பணம் அது என பணத்துடன் பிடிப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.  இந்த வழக்கை முதலில் தாம்பரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில்,  பின்னர் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.  

CBCID

மேலும், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்,  பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,  நெல்லை தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் உட்பட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.   இந்த விசாரணையின் அடிப்படையில் புதுவை மாநில பாஜக தலைவரும்,  ராஜ்யசபா எம்.பியுமான செல்வ கணபதிக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். 

இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக புதுச்சேரி பாஜக எம்.பி.செல்வகணபதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.  தனக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், மேலும் மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என புதுவை மாநில பாஜக எம்.பி., செல்வகணபதி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேவை ஏற்படும் பட்சத்தில் புதுச்சேரிக்கு நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.