“அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? வேண்டுமானால் அவர் வீட்டு கதவை மூடிக்கொள்ளட்டும்”- நயினார் நாகேந்திரன்

 
நாகேந்திரன் நாகேந்திரன்

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்ப மீனவ பகுதியில் பாரதப் பிரதமரின் 121 வது மனதின் குரல் நிகழ்ச்சி மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற இருந்தது, முறையாக காவல் துறையிடம் அனுமதி பெறாத காரணத்தினால் நிகழ்ச்சியை நடத்த காவல்துறை மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அப்பகுதியில் மேற்கொண்ட ஏற்பாடுகளை அகற்றினர். தொடர்ந்து இணை ஆணையர் விஜயகுமார் உடன் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள துளுவ வேளாளர் சமுதாய நலவாழ்வு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளும்படி காவல்துறை கேட்டுக் கொண்டதால், காவல்துறையினரை கண்டித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பேரணியாக வந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள துளுவ வேளாளர் சமுதாய நலவாழ்வு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தினர்.

Image

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “காஷ்மீர் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. காஷ்மீர் சம்பவம் குறித்து பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மனதின் குரலில் முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு பேசி அவர்களது நினைவுகளையும் நிகழ்வுகளையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்கிறார். இந்த முறை 121 வது மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களோடு நான் நின்று பார்த்தேன். கடந்தாண்டு இதே இடத்தில் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சிக்கு எங்களுக்கு காவல்துறை அனுமதி இருந்தது, ஆனால் இந்த ஆண்டு இணை ஆணையர் விஜயகுமார் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.


துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியாக இருக்கும் காரணத்தினால் காவல் இணை ஆனையர் பாஜக நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கூறினாரா என்பது தெரியவில்லை. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எங்களது கடுமையான கண்டனங்களை நாங்கள் பதிவு செய்கிறோம். துணை முதல்வராக இருக்கக்கூடிய காரணத்தினால் அடக்கு முறையை கையில் எடுக்கலாம் என உதயநிதி எண்ண வேண்டாம்? மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என எண்ணி விட்டார்கள், ஆட்சி என்பது நிரந்தரமானது இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கடிதம் கொடுத்து ஒரு வாரம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இன்று பொது இடத்தில் செய்யக்கூடாது மண்டபத்தில் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மண்டபத்தில் ஒதுக்கியதற்கு விஜயகுமாருக்கு ஒரு விதத்தில் நன்றி கூறலாம். வெளியில் செய்திருந்தால் வெயிலில் நின்று இருக்க வேண்டும், இங்கே குளிர்ச்சியாக உள்ளது. ஆகவே அவருக்கு நன்றி. கூட்டணி ஆட்சி அதிகாரத்தின் பங்கு எனக்கூறி கூட்டணிக்கு அழைத்த அதிமுக மற்றும் த.வெ.க கதவுகளை மூடிவிட்டதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளார். அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? வேண்டுமானால், திருமாவளவன் அவர் வீட்டு கதவை மூடிக்கொள்ளட்டும்” என்றார்.