"தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு" - நயினார் நாகேந்திரன்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

பாஜக சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி இன்று மாலை திருச்சியில் நடைபெற உள்ளது. அந்த பேரணியில் கலந்து கொள்ள பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரயில் மூலம் இன்று திருச்சி வந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொள்ளாச்சி வழக்கு தொடர்பான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மது போதையால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டை விட 52% தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அதற்கு திமுக முழு காரணம் அவர்கள் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொடநாடு, கொலையை கொள்ளை விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவார்களா என்கிற கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது கூட்டணி குறித்து அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.


