“கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு நான் பொறுப்பில்லை”- நயினார் நாகேந்திரன்

 
ந் ந்

சூழ்நிலை காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

ttv nainar nagendran


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது கையாண்டதுபோல் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியை கையாளவில்லை. எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப்பிடித்ததே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நாங்கள் விலக காரணம்,ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் சமரசம் பேச தயார் என முழு மனதோடு நயினார் நாகேந்திரன் கூறவில்லை. வேண்டுமானால் ஓபிஎஸ் உடன் பேசலாமென நயினார் கூறுவதில் இருந்தே அவரது மனநிலை புரிகிறது. முதலமைச்சர் வேட்பாளர் மாற்றத்தை எதிர்பார்த்து 4 மாதங்கள் காத்திருந்தோம்.

அது நடக்காததால் விலகினோம். கூட்டணியிலிருந்து அமமுக வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம். ஓபிஎஸ்க்கு நான் பேசாமல் வேறு யார் பேசுவார்? ஓபிஎஸ்க்கு பேச இவர் யார் என நயினார் நாகேந்திரன் கேட்கிறார். நாங்களும், ஓபிஎஸ்-ம் NDA கூட்டணியில் தொடர்வதை நயினார் நாகேந்திரன் விரும்பவில்லை. நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார். எங்களை அழித்துக்கொண்டு நயினார் நாகேந்திரன் ஜெயிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. அகங்காரத்துடனும் ஆணவத்துடனும் நயினார் நாகேந்திரன் பேசுகிறார். கூட்டணிக் கட்சிகளைக் கையாள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலடிக் கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அரசியல் மாற்றங்களால் சில மன வருத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனை தேசிய தலைமையுடன் பேசி தீர்த்திருக்கலாம். சூழ்நிலை காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். டிடிவி சாருக்கு என்னுடைய மரியாதை எப்போதும் இருக்கும்” என்றார்.