“செங்கோட்டையன் சேராத இடம் சேர்ந்துள்ளார்”- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

வாக்காளர் திருத்தப்பட்டியலில் எந்த குளறுபடியும் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

தென்காசியில் இருந்து  காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம்  தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இறந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் திமுக போராடுகிறது. எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை,  குளறுபடியே தமிழக முதல்வர் மட்டும்தான். தவெகவின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது. இவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது அப்போது நல்லாட்சி அளிக்கப்படவில்லையா?

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அதிமுகவில் இருந்து தற்போது செங்கோட்டையன் தவெகவிற்கு சென்று உள்ள நிலையில்,  அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது. தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன், தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். எந்த தனி நபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை , சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.