“டிடிவி தினகரன் யாரை பார்த்து பயப்படுகிறார் என தெரியவில்லை”- நயினார் நாகேந்திரன்
நீலகிரி மாவட்ட மக்கள் நல்லவர்கள் வந்தோர சிறப்பாக உபசரிக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால் உதகை மேட்டுப்பாளையத்தில் அலுவலகம் வைத்து ஓடோடி சென்று உதவி செய்தும் கூட கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எல்.முருகனுக்கு வாக்களிக்காதது வருத்தமளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உதகையில் பாஜக மாநில தலைவரின் சுற்றுப்பயணம் நடைபெற்றது. ஏடிசி பகுதியில் அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் படுகர் சமுதாய மக்களின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் உள்பட அனைவரும் வந்தோரை சிறப்பாக உபசரிக்கும் நல்ல குணம் கொண்ட மக்கள் என்றும் ஆனால் உதகை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அலுவலகம் வைத்து ஓடோடி சென்று மக்களுக்கு உதவி செய்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களிக்காதது வருத்தமளிப்பதாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “பாஜக தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை மட்டுமல்ல, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காது, அரசினுடைய குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவோம். தேர்தலுக்கு இன்னும் 90 நாட்கள் இருக்கிறது. அதற்குள் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும். தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுடன் உடன்பாடு ஏட்டப்பட்டு இருக்கிறது” என்றார்.
அப்போது டிடிவி தினகரன் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன்னை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தது குறித்தும் தன்னை யாரும் மிரட்டி கூட்டணிக்கு வரவழைக்க முடியாது என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிடிவி தினகரன் யாரை பார்த்து பயப்படுகிறார் என்பது தெரியவில்லை, யாரையும் மிரட்டி பணிய வைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்றும் பதில் அளித்தார்.


