“நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்"- நயினார் நாகேந்திரன்
மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி மதுரை மண்டேலா நகர் திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மஸ்தான்பட்டி தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தற்போது மாநாட்டில் மட்டும் பிரதமர் கலந்து கொள்வதாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்தால் அதையும் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டுள்ளது. வெளிநாடுகளில் யாராவது சிக்கி இருந்தால் அவர்களை நாங்கள் தான் தமிழகத்துக்கு அழைத்து வந்தோம் என சொல்கிறார்கள். வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் தான் டிரம்பிடம் பேசி சரி செய்தோம் என்கிறார்கள். திமுகவிற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதே வேலையாக உள்ளது. வெளிநாடுகளில் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வெளியுறவுத்துறை மூலமாகத்தான் செய்ய முடியும். ஆனால் மா.சுப்பிரமணியன் நான் செய்தேன் நான் செய்தேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது. தமிழகத்தில் கஞ்சா பூஜ்ஜிய சதவீதம் என சொல்லும் மா.சுப்பிரமணியன் அதே போல தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று கூட சொல்லுவார்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்லது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை, தூய்மை பணியாளர்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆனால் அவர்களை போராட வைத்து அடித்து தெருவில் நிறுத்தி தற்போது சாப்பாடு போடுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களிடம் தற்போது முதலமைச்சர் பேசி எப்படியாவது அடித்து பிடித்து கூட்டணி மந்திரி சபை இல்லாமலே நான் முதலமைச்சராகி உங்களுக்கு நல்லது செய்கிறேன் என சமாளித்து வருகிறார். கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. எதற்காக டெல்லி சென்று கனிமொழி ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதல்வர் பேச வேண்டும். எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தல் பற்றி பேச வேண்டும். எல்லாம் பார்க்கும்போது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது.

நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம் தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். நாங்கள் கேட்பதற்கு அவர்கள் மாட்டேன் என சொல்லவில்லை. நீங்களாக பேசி ஏதாவது குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இங்கே ஒன்றும் நடக்காது. இந்த ஆண்டு பொங்கல் மது விற்பனை 800கோடி ரூபாய். திமுக அரசிடம் மக்களுக்கு நல்லது செய்யவும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று திட்டங்களை செய்யவும் எந்த அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் எண்ணமும் இல்லை திட்டமும் இல்லை. தேமுதிகவிடம் நாங்கள் பேசவில்லை, நான் பேசவில்லை
மண்டபம் தீப்பற்றி எரியும்போது வீட்டில் எரிந்த விளக்கை அணையுங்கள். அணையுங்கள் என்று ஒருவர் கூறுவதைப் போல திரைப்படத்தில் பேசுவதைப் போல அமைச்சர் ராஜகண்ணப்பன் எல்லோருக்கும் துப்பாக்கி தர முடியுமா என கேட்கிறார். துப்பாக்கி கொடுத்தால் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொள்வார்களா? நான் நாய் தொல்லை மட்டும் அல்ல பன்றி தொல்லை இருக்கிறது எவ்வளவோ தொல்லைகள் இருப்பதை சட்டமன்றத்தில் எடுத்து கூறிவிட்டோம். நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒவ்வொரு அதிமுக எம்ஜிஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது” என பேசினார்.

