“இரட்டை இலையின் மேலே தாமரை மலர்ந்தே தீரும்”- நயினார் நாகேந்திரன்
இரட்டை இலையின் மேலே தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாநகரம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கரூர், தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , “நம்முடைய இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ , அதை ஏற்று நாம் நடக்க வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் அகில இந்திய தலைமை சொன்னதைத் தான் செய்ய வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால் அது நமக்கு எதிராக போய்விடும், எனவே எச்சரிக்கையாக மீம்ஸ்களை போட வேண்டும். இக்கட்சியை தமிழகத்தில் வளர்க்க தற்போதுள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் மாநில தலைவருமான எல்.முருகன் அவர்கள் வேல் யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சிபி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரத யாத்திரை மூலம் இக்கட்சியை வளர்த்தார். அதேபோல் இக்கட்சியை வளர்க்க நாமும் பாடுபட வேண்டும். இப்பொழுது அமைந்துள்ள நம்முடைய கூட்டணி ஒரு உறுதியான கூட்டணி,நேர்மையான, இறுதியான கூட்டணி. எனவே இரட்டை இலையின் மேலே தாமரை மலர்ந்தே தீரும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு நாம் பாடுபட வேண்டும், அதற்காக பூத் கமிட்டியை நாம் வலுப்படுத்த வேண்டும், மத்திய அரசோடு, மாநில அரசு சுமுகமாக நடந்து கொண்டால், தமிழ்நாட்டிற்கான நிதி அதிகமாக கிடைக்கும். நானும் தமிழ்நாட்டிற்கு அதிக நிதியை பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுப்போம். கச்சத்தீவு வேண்டுமென்றால் மோடி அவரிடம் தான் பேச வேண்டும், நீட் தேர்வு வரவே வராது என்கிறார்கள். நீட் தேர்வு குறித்தும் மேகதாது, தாது, மணல் போன்றவை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது மத்திய அரசிடம் பேசி சுமுகத்திரியில் காண வேண்டும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். நம் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மறந்து விட்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.


