பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
ஓய்வூதியம் வழங்க போதிய நிதியில்லாததால், கார்பஸ் ஃபண்ட்டில் இருந்து ரூ.95 கோடியை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வேண்டிய நிதிகூட இன்றி முடங்கியிருப்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில், அவசரகால நெருக்கடியைச் சமாளிக்கவும் நிதி நிலையை வலுப்படுத்தவும் பத்திரமாக ஒதுக்கப்பட்டுள்ள கார்பஸ் ஃபண்டின் வட்டியைப் பயன்படுத்தி ஓய்வூதியம் வழங்காமல் மூலதனத்தையே செலவழித்து சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதியம் வழங்கியுள்ளது அதனிடம் அடிப்படை செலவுகளுக்குக் கூட வேறு எந்த நிதியுமே இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு!
— Nainar Nagenthran (@NainarBJP) November 30, 2025
ஓய்வூதியம் வழங்க போதிய நிதியில்லாததால், கார்பஸ் ஃபண்ட்டில் இருந்து ரூ.95 கோடியை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய… pic.twitter.com/bN9fqyM2sf
சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் சம்பள பாக்கி, ஓய்வூதிய பாக்கி எனப் பேராசிரியர்கள் போராடுவதும், "பணம் இல்லை" எனப் பல்கலைக்கழகங்கள் கைவிரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. உயர்கல்வி நிலையங்களின் அடிப்படைச் செயல்பாட்டுக்குத் தேவையான நிதியைக் கூட அளிக்காமல், பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கி, மாணவர்கள் எதிர்காலத்தைச் சீரழியவிட்டு, கோடி கோடியாக செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


