"ஆடுவது தான் உங்கள் கொள்கையா? நாளை மக்களுக்காக என்ன செய்வீர்கள்?- விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன்
வட இந்தியர்களை எள்ளி நகையாடும் வகையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். இது ஒரு சாதாரண விஷயம். விஜய் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அரசியலில் ஒரு கட்சிக்கான தலைவராக தகுதியை வளர்த்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கட்சி ஆண்டு விழாவில் சினிமாவில் ஆடுவதை போல் ஆடியுள்ளார். மக்கள் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால் விஜய் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆடுவது தான் உங்கள் கொள்கையா..? நாளை மக்களுக்காக என்ன செய்வீர்கள்..?
பிரதமரையே இப்படி செய்வேன் என்று சொன்னார்கள்.. திமுக ஆட்சியில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது சாதாரணம் தான். வட இந்தியர்களை எள்ளி நகையாடும் வகையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்க வேண்டும். வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமின்றி ஆபத்தானது. தமிழகத்தில் திமுகவின் பிளவுவாத அரசியலை, அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரிக்கின்றன” என்றார்.


