கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது

 
பாஜக நிர்வாகி பாஜக நிர்வாகி

வேலூர் அருகே பல்வேறு கொலை வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இன்று மாலை இளைஞர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம், நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  அப்போது, அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய்(37) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி(எ)சதீஷ்(37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பதும் தெரிந்தது. 

இதனையடுத்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  கைதான சதீஷ் மீது அரக்கோணம், வேலூரில் நடந்த முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.