பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! ஸ்டாலினுக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் உரிமை உள்ளதா?- அண்ணாமலை

 
annamalai mkstalin

சிவகங்கை தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது. அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

Annamalai

காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் திரு. ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.