மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை கைது
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து அனுமதியின்றி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். போலீசாரிடம் முறையாக அனுமதி பெறாததால், வள்ளுவர் கோட்டத்தில் துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு போராட்டம் என அறிவித்துவிட்டு வந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். 10க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தர்ராஜன், கைது செய்யப்படும்போதுஅளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும்,பாலியல் வன்கொண்டுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இது போன்ற குற்றங்களை நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறை காட்டவில்லை என கூறினார்.

தொடர்ந்து ஒன்றும், இரண்டுமாக சிறிய கூட்டமாக வந்த பாஜகவினரை போலீசார் உடனடியாக கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


