“உதயநிதி போன்று அவரின் அப்பா தோளில் ஏறி நான் வரவில்லை”- தமிழிசை

 
s

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பாக மயிலை வேலு, பாஜக சார்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் சார்பாக அருண், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வெங்கட்ரமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை மருத்துவர் ரங்கா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று பிரசாரம் மேற்கொண்டார். ஆழ்வார்பேட்டையை சுற்றி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கியும், மயிலாப்பூருக்கான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜானை  அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், பல்வேறு இடங்களில் பூச்செண்டு கொடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.

இதனிடையே, பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், “பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் பிரமாதமாக சென்று கொண்டிருக்கிறது. மக்களிடம் இருந்து அன்பான சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என விருப்பப்படுகிறேன். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லி வருகின்றனர். அந்த கோட்டையை பாஜக தகர்த்தெறியும். நிச்சயமாக பாஜக மயிலாப்பூரில் வெற்றி பெறும். மயிலையில் தாமரை மலர்வதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. மயிலாப்பூரில் அடிப்படை பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. ஹவுசிங் போர்டு பிரச்சினைகள், மீனவ மக்களின் பிரச்சினைகள், சாமானிய மக்களின் பிரச்சனைகள் உள்ளது. ஆன்மீக பூமியான மயிலை தொகுதியின் பழமைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். புதுமையும் பரவ வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருப்பது ஒரு அங்கீகாரம,  மக்களுக்கு சேவை செய்ய என்பது அதிகாரம். பதவிக்காக நான் போட்டியிடுகிறேன் என சிலர் சொல்கிறார்கள். நான் பதவிக்காக அல்ல உதவிக்காக தான் போட்டியிடுகிறேன். மருத்துவராக இருக்கும்போதும் மக்களோடாக மக்களோடு தான் இருந்தேன். ஆளுநராக இருக்கும் போதும் மக்களிடம் இருந்தேன். மக்களோடு மக்களாக தமிழ்நாடு அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என்பது எனது ஆசை. வேறு மாநிலத்தில் சேவை செய்வது வேறு, தமிழ்நாட்டில் எனது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். சென்னையின் பாரம்பரியமிக்க தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் அத்தியாவசிய தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. மேலும் பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல்வேறு அவதூறுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டும், அப்படித்தான் நான் அதை பார்க்கிறேன். அதனை சக்தியுடன் நான் எதிர்கொண்டு வருகிறேன். உதயநிதி அனுபவமின்மையால் பேசுகிறார். உதயநிதி போன்று அவரின் அப்பா தோளில் ஏறி நான் வரவில்லை. தானாக வளர்ந்துகொண்டு வருகிறேன். உதயநிதி அவருடைய கட்சியிலேயே சேர்ந்து அப்பா தோள்களில் ஏறி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பினை பறித்து துணை முதல்வராகி இருக்கின்றார்.” எனத் தெரிவித்தார்.