பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது முதலமைச்சர் அவரை ஏன் வரவேற்கவில்லை..?- தமிழிசை
தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயிலை கொடுத்த மத்திய அரசு, மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை துவங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “9 கோடி விவசாயிகள், பயன்பெறும் வகையில் ரூ.18,000 கோடியை இன்று பாரத பிரதமர் வழங்க உள்ளார். விவசாய மாநாட்டிற்கு மட்டும் வரவில்லை, நல்ல திட்டங்களையும் அவர்களுக்கு உதவியையும் பிரதமர் அறிவிக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் விதை நெல்லை கூட சரியாக பாதுகாக்காமல் வளர விட்டுவிட்டு மோசமடைய செய்து பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றார் முதல்வர். டெல்லியில் இருந்தால் கடிதம் எழுதலாம், ஆனால் தற்போது நம்ம ஊருக்கு பிரதமர் வருகிறார். கோவைக்கு விமானத்தில் வந்து பிரதமரை வரவேற்று இருக்கலாம். அதுதான் நமது தமிழ் பண்பாடு. முதல்வர் நேரில் வரவேற்காத வரை நாம் கண்டிக்கின்றோம். முதலமைச்சர் பாரபட்சமாக நடக்கக்கூடாது. பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது மிக தவறு, வந்தாரை வரவேற்கும் தமிழகம்.
நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் முதலில் அவர் நம்முடைய பிரதமர் அவர் எல்லா நல திட்டங்களையும் கொடுத்திருக்கிறார், எல்லா விமான நிலையங்களும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது, கருப்பு கொடி நிச்சயமாக காட்ட வேண்டும் என்றால் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் காட்ட வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை, இதே கோயம்புத்தூரில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு பெண் எவ்வளவு பாதிக்கப்பட்டார் என்று தெரியும். உண்மையிலேயே கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்றால் மோசமான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தான் காட்ட வேண்டும் என்பது என் கருத்து. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் புறக்கணித்து போடவில்லை, திருப்பி விவரம் கேட்டு இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் வந்தே பாரத் ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு விடப்பட்டுள்ளது. சிவகங்கைக்கும் விடப்பட்டுள்ளது. வந்தே பாரத்தில் ஏற வைக்கின்ற அரசாங்கம் மெட்ரோ ரயிலில் ஏற வைக்க மாட்டார்களா? பாராபட்சமாக நீங்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதை நான் வலிமையாக சொல்கிறேன். இன்றைக்கு ரயில்வே துறையில் அதிகமான வந்தே பாரத் தமிழ்நாட்டிற்கு தான் வந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் உள்ள திட்டங்களுக்கு அனுமதி அதிலுள்ள வசதிகளை பொறுத்து நிச்சயமாக கொடுப்பார்கள். 12 மாநிலங்களில் 11 மாநிலங்களில் ஏறக்குறைய எஸ்.ஐ.ஆர் முடிவடைந்துவிட்டது. நீங்கள் இங்கே எதிர்க்கிறீர்கள் என்றால் மாநில அரசு மக்களுக்கு ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு. இது ஒரு ஜனநாயக கடமை அவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசு அலுவலர்களுக்கு இன்றைக்கு எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துபவர்களுக்கு ஊதியம் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. போராட்டம் நடைபெறுவதை அரசாங்கம் தடுக்க வேண்டும் அரசாங்கமே ஊக்கப்படுத்துகிறது. அதுதான் பிரச்சனை” என்றார்.


