"விஜய் ஒரு சின்னத் தம்பி... வரும் தேர்தலில் NDA கூட்டணிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி”- தமிழிசை
விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் தேசிய வாக்காளர் தினம் முதல் முறை வாக்காளர்கள் சந்திப்பு கூட்டம் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், கலந்து கொண்டு முதல் வாக்காளர்களுக்கு வாக்கு செலுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “வாக்காளர் ஆயுதம் என்பது நமக்கு மிகவும் முக்கியத்துவமானது. என்றும் இன்றைய காலகட்டத்தில் முதல் நிலை வாக்காளர்கள் அவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பூத்துக்கு செல்ல வேண்டும், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும் எனவே இதெல்லாம் கேட்க வேண்டாம் என்று வீட்டில் இருந்து விடலாம் என்ற தயக்கம் அவர்களிடம் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் முதல் வாக்காளர்கள் தங்காது முதல் வாக்கை செலுத்தி விடுங்கள் என்று முதல் வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும், அவர்களுக்குத் தற்போதைய அரசு உரிய சலுகைகளை வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மொழிப்போர் தியாகிகளை இன்று அதே காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு திமுக கொண்டாடுவது முரணானது. தமிழக அரசுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை என்று கூறிவிட்டு, திமுக நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. நடிகர் விஜய் ஒரு சின்னத் தம்பி, அரசியலில் புதியவர்கள் வருவது தவறில்லை, ஆனால் ஏற்கனவே சிறப்பாகச் செயல்படும் கட்சிகளையும் தலைவர்களையும் அவர் கவனிக்க வேண்டும். விஜய் தனது கட்சியை வளர்க்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதகமாக இருக்கும், மாறாக இந்தி கூட்டணி அவரை நசுக்கப் பார்க்கும்.
தமிழகத்தில் நேரடிப் போட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தான். விஜய் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே முடியும் என்று உறுதிபடத்தெரியும். அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஏற்கனவே அமித் ஷா அறிவித்துவிட்டார், அதைத் தினமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும். மழை வரவில்லை என்றாலும், தங்கம் விலை ஏறினாலும் மோடி எதற்கெடுத்தாலும் மோடி மோடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன். விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தனது கூட்டணிக் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. வேங்கைவையில் பிரச்சனை குறித்து திருமாவளவன் என்ன கேள்வி கேட்டார்... ஜெயக்குமார் மரணம் காங்கிரஸ் என்ன கேள்வி கேட்டது? தமிழ்நாட்டில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட்டின் நிலைப்பாடு என்ன? பிரேமலதா முரசு கொட்டுமா என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு வெற்றி முரசு கொட்ட நாங்கள் காத்திருக்கிறோம். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தமிழ் மொழிப் பாடம் குறித்த ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது” என தெரிவித்தார்.


