“முதல்வர் அறையிலேயே ரீல்ஸ்... இதை விஜய் கண்டித்திருக்க வேண்டும்! ரீலிலிருந்து ரியலுக்கு வாருங்கள்”- தமிழிசை

 
ச்

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “பிஎம் ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன். கல்வி அமைச்சர் ராஜ்மோகன் எங்கள் கொள்கையை சமரசம் செய்து மாட்டோம் என்கிறார். இது அரசியல் கிடையாது, குழந்தைகளின் எதிர்காலம். புதிய அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை ஆழ சிந்திக்காமல் பொத்தாம் பொதுவாக கூறுவது, மக்களுக்கு பலன் என்ன கிடைக்கும் என்பது எல்லாம் தெரியாமல் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. முதல்வர் நடத்தும் பள்ளியிலேயே மூன்று மொழி இருக்கிறது. பணம் கொடுத்து படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று மொழி, ஏழை குழந்தைகளுக்கு இரண்டு மொழி. ஏழை குழந்தைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான கல்வி கிடையாது என்ற சூழ்நிலை இருக்கக் கூடாது. இப்படி எல்லாம் நடந்து கொண்டதினால் தான் திமுகவை மக்கள் புறக்கணித்தார்கள். மறுபடியும் மறுபடியும் அதே தவறை செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் இங்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் திமுகவின் தொடர்ச்சியாக இந்த ஆட்சி நடப்பது நல்லது அல்ல. விஜய்க்கு தனித்தன்மை இருக்க வேண்டும். திமுகவின் கூட்டணி கட்சிகள் தான் இவருக்கு ஆதரவு தருகிறார்கள். அதனால் அழுத்தம் கொடுத்து, அழுத்தத்திற்கு அடிபணிந்து மாற்றம் இல்லாமல் செய்து விடக்கூடாது என்பது நமது கவலையாக இருக்கிறது.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இருந்தோம். அதனை தவெக செய்துவிட்டது. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது பின்பு நிறைவேறும். அதிமுக - பாஜக கூட்டணி பயங்கரமாக தோற்கவில்லை. திமுக கூட்டணி பயங்கரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம். 2031 எங்களுக்கான ஆட்சி. இன்று சனாதன தர்மத்தை பற்றி உதயநிதி பேசுகிறார். தவெகவின் எம்எல்ஏக்கள் முஸ்தபா, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசுகின்றனர். இதேபோன்று இந்துக்களின் உணர்வை புண்படுத்திக் கொண்டே இருந்தார்கள் என்றால், நிச்சயமாக உங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படுவார்கள். முதலமைச்சர் அறையிலேயே ஒருவர் ரீல்ஸ் எடுக்கிறார். ரீலிலிருந்து ரியலுக்கு வர வேண்டும். முதலமைச்சர் விஜய் இதனை கண்டிக்க வேண்டும்.செயலாற்றுவதில் தீவிரத்தன்மை இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக வந்தோம் என்றார்கள். 17 லட்சம் கட்டுமான டெண்டர் 6 மணி நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் கவலை அளிக்கிறது. கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும். சென்ற ஆட்சியில் நடந்த தவறுகள் நடக்காமல் இருக்கவேண்டும். ஆனால் இரட்டிப்பாக நடக்க ஆரம்பிக்கிறதோ என்று பயமாக இருக்கிறது. கொலைகள், பாலியல் பலாத்காரம் இந்த ஒரு வாரத்தில் அதிகரித்திருக்கிறது. சிங்கப்படை அமைத்தார்கள், ஆனால் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 


பாட்டிலுக்கு பத்து ரூபாயா, 20 ரூபாயா என்ற கேள்வி இன்னும் மக்களுக்கு இருக்கிறது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடியவர்கள் தற்போது பாட்டிலுக்கு இருபது ரூபாய் என்று பாடப் போகிறீர்களா?  இல்லை குடித்துவிட்டு ஆடப் போகிறார்களா என்று எதுவும் தெரியவில்லை. முதல்வர் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அமைச்சர்களை கூப்பிட்டு பேச வேண்டும். கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அதிகாரிகள் கூட்டம் எப்படி நடத்தினார் என்று பார்க்கும் போது கவலை அளிப்பதாக இருந்தது. புதியவர்களுக்கு வழிகாட்டுதல் நடக்க வேண்டும். புதிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வழிகாட்ட வேண்டும்.  பாஜக புறக்கணிக்கப்படவில்லை. ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் இரண்டு எம்பிகளாக இருந்தவர்கள், இப்போது 20 மாநிலங்களை ஆண்டு வருகிறோம். வெற்றி, தோல்வி என்பது சகஜம். நாங்கள் வாக்கு சதவீதத்தை அதிகரித்திருக்கிறோம். இந்த தோல்வி யாரும் எதிர்பார்க்காதது. மழை தூறும் என்று நினைத்தோம், சுனாமியே வந்துவிட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான அரசியலில் தெம்பு இருக்கிறது. எங்களுக்கு கொள்கையும் இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் ரீல்ஸை மட்டும் நம்புபவர்கள் அல்ல, ரியல் வாழ்க்கையை நம்புபவர்கள். பதவி ஆசைக்கு உள்ளே சென்று விட்டு கவர்னர் உள்ளே வரக்கூடாது, பாஜக உள்ளே வரக்கூடாது என்று கூறுகிறார்கள். திமுக கூட்டணி உடைந்து சுக்கு நூறாகிவிட்டது.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இருக்கிறது. அவர்கள் பேசிய பிறகு நாங்கள் இது குறித்து பேசுகிறோம். தவெகவினர் ஐடி விங்கில் பலமாக உள்ளனர்.  மற்றவர்கள் அதனை மேம்போக்காக பார்த்தார்கள். இவர்கள் குழந்தைகளை கூட இன்ஃப்ளூயன்ஸ் செய்தார்கள் என்பது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இது சட்டத்திலேயே உள்ளது” என்றார்.