பீகார் போலவே தமிழ்நாட்டிலும் தேர்தல் முடிவுகள் இருக்கும் - வானதி சீனிவாசன்
பீகாரை தமிழ்நாட்டிலும் விரைவில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 122 தொகுதிகளைக் கடந்து பெருவாரியான தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது மக்களின் சரியான தீர்ப்பினை உறுதி செய்துள்ளது. இண்டி கூட்டணியின் வாக்குத் திருட்டு போன்ற பொய் பிரச்சாரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடிஜி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையும், திட்டங்களும் பீகாரை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றிருப்பது இந்தத் தேர்தலில் அது பிரதிபலித்திருக்கிறது. பீகார் மக்கள் மீண்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடிஜியை முழுவதுமாக ஆதரித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, இந்தத் தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவு பெருமளவு வாக்களித்த பீகார் சகோதரிகளுக்கும், வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த பீகார் இளைஞர்களுக்கும், பீகார் மக்களுக்கும் இந்த வெற்றிக் களிப்புடன் நன்றியை உரித்தாக்குகிறேன். இதேபோல் தமிழ்நாட்டிலும் விரைவில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் தீய சக்தி திமுகவிற்கு வரும் தேர்தலோடு முடிவு கட்ட தயாராகிவிட்டார்கள். மாற்றம் விரைவில் மலரும். பீகாரில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


