"விரிசல் கிடையாது... அதிமுக பாஜக கூட்டணி Strong-ஆக உள்ளது"- வானதி சீனிவாசன்
கோவை பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ற். வானதி சீனிவாசன், “முருகன் மாநாட்டால் அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. விரிசல் எல்லாம் இல்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது என அமித்ஷா தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் போதை பொருள் இளைஞர்கள் மத்தியில் தடுப்பதை தமிழக அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்புடன் இதை முற்றிலும் அழிக்க வேண்டும் முன்னாள் மத்திய மந்திரி ராசா தரக்குறைவான விமர்சனத்தை கைவிட வேண்டும். நானும் திராவிடர் தான், அதில் என்ன சந்தேகம்?
நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டவரப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர்கள் கேட்ட போது கூட மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனது அரசின் தோல்விகளை மறைக்கவே திமுக மத்திய அரசை குறை கூறுகிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை. மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை. இப்போதுதான் வட மாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது. கல்வியில் தமிழ்நாட்டை பிஹார் மாநிலத்தோடு ஒப்பிடக்கூடாது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள்” என்றார்.


