2026ல் NDA கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கோவையில் மெட்ரோ ரயில் வரும்- வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் 2026 சட்ட பேரவை தேர்தலுக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் மெட்ரோ திட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கோவை–மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ரத்து என திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டின் மெட்ரோ பாலிசியில் மக்கள் தொகை விவரம், சாலை பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பற்றிய முழுமையான புரிதலின்றி திமுக பொய்யான கருத்துகளை பரப்பி வருகிறது. மெட்ரோ பாலிசி பொதுவானது என்றும், திட்டத்துக்கான தேவைகளை மாநில அரசு சரியாக விளக்க வேண்டும். கோவையில் உள்ள கடைகளையும் கட்டிடங்களையும் இடிக்கும் வகையில் திமுக அரசு ஒன்றிய அரசுக்கு தவறான அறிக்கையை அனுப்பியுள்ளது. இது கோவை மக்களை பழிவாங்கும் முயற்சியாக இருக்கிறது. மக்கள் தொகை குறைந்த பகுதிகளிலும் மெட்ரோ வழங்கியுள்ளதாக முதல்வர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதை எதிர்த்து, ஆகிராவுக்கு மெட்ரோ வழங்கப்பட்டதற்கான காரணம் தாஜ்மஹால். உலகளாவிய சுற்றுலா வருகை அதிகம் என்பதைக் மாநில அரசு விளக்கியிருந்தது.
திமுக அரசு கோவைக்கு துரோகம் செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026 இல் ஆட்சியமைந்த பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும், குறைந்த காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியும், 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளும், 12 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிதியும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தமிழக அரசுக்கு கோவை மெட்ரோ திட்டத்துக்கான சரியான படிவம் நிரப்பத் தெரியாத நிலை உருவாகியிருக்கிறது. திட்டத்திற்கான அதிகாரி கூட நியமிக்கப்படவில்லை. பிரதமர் கோவைக்கு வந்தபோது தமிழக அரசு நேரடியாக இந்த திட்டத்தை பேசிக் கொள்ளாமல், தேர்தல் நேரம் என்பதால் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவையில் தரமான சாலைகள் கூட இல்லாத நிலைக்கு மாநில அரசின் திறமையின்மையே காரணம். பிரதமருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக தரக்குறைவான பேச்சு நடத்தியவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2026க்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படும்” என்றார்.


