கோவை கிளை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடுவதா?- திமுக அரசுக்கு வானதி கண்டனம்
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காக, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின், கோவை கிளை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடுவதா? பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டிய அரசே, அதற்கு தடையாக இருக்கக் கூடாது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1984ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் பெண்கள், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, தொலைநோக்குப் பார்வையுடன் எம்ஜிஆர் உருவாக்கிய பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவை பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. எனவே, பெண்களுக்கு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு வாய்ப்பை வழங்கும் வகையில், கடந்த 2016 அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின், கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் கோவையில் அமைக்கப்பட்டது. இந்த மையம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிகமான மாணவிகள் சேர்க்கை நடைபெற்றதால், கடந்த 2019 அதிமுக ஆட்சியில், இந்த இந்த மையத்தை விடுதி வசதியுடன் விரிவுபடுத்த, கோவை மாவட்டம் பிளிச்சி கிராமத்தில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கபப்ட்டது.
கடந்த 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெண் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம், மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவையில் வாடகை கட்டிடத்தில் பல்வேறு நெருக்கடிகள் கிடையே அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. கோவை மாநகராட்சி சார்பில் வாடகை கேட்டு தொடர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான மாணவிகளின் சேர்க்கையை கோவை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் நிறுத்தியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மிகமிக குறைந்த கட்டணத்தில் இந்த மையத்தில், ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவிகள், உயர்கல்வி படித்து வந்தனர். இந்த மையம் மூடப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பலரின் வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. பல்வேறு சமூக, பொருளாதார தடைகளைத் தாண்டி 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பெண்கள் உயர்கல்வி படிக்க துவங்கியுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல, அவர்களைத் தாண்டியும் தங்களால் எதுவும் சாதிக்க முடியும் என்று பெண்கள் நிரூபித்து வருகின்றனர். இந்த தருணத்தில் பெண்களுக்கு துணை நிற்க வேண்டிய திமுக அரசு, அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அன்னை தெரசா மகளிர் கொள்கை கழகத்தின் கோவை ஆராய்ச்சி மையத்தை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது. எந்த காரணத்தை கூறினாலும், இந்த மையத்தை மூடுவதை ஏற்கவே முடியாது. பெண் கல்விக்கு தடையாக எது இருந்தாலும், அந்த தடையை தான் உடைக்க வேண்டுமே தவிர, பெண் கல்விக்கு முட்டுக்கட்டையாக அரசே இருக்கக் கூடாது. எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின், கிளை விரிவாக்க ஆராய்ச்சி மையம், கோவையில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும். இந்த மையத்திற்கு, சொந்த கட்டிடம் கட்டவும் முதலமைச்சரின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


