அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன; மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். வரும் கல்வியாண்டு முதல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - NEET அடிப்படையிலேயே, இளங்கலை பிசியோதெரபி (B.PT), இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "எம்.பி.பி.எஸ். போல, மற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாக நாங்கள் எச்சரித்து வந்தது உண்மையாகிவிட்டது. எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் பெரிய திட்டத்தின் முதல்படியே இது" என்று கூறியிருக்கிறார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை அரசியலாக்கி, ஒவ்வொரு ஆண்டும், மாணவர்கள், பெற்றோர்களுக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அச்சத்தையும், மன் உளைச்சலையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும், நம் தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பெரும் சாதனை படைத்து வருகின்றனர். சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது, BPT, BOT ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. நான்கரை ஆண்டாக இருந்த BPT பட்டப்படிப்பு, 5 ஆண்டாக மாறி நீட் தேர்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பிசியோதெரபி படிப்புக்கு பெரும் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என, பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கையை ஏற்றே, BPT, BOT பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இவற்றையெல்லாம் மறைத்து, வழக்கம் போல, நீட் எதிர்ப்பு அரசியல் செய்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாட துவங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது கடும் கண்டனத்திற்குரியது. பிசியோதெரபி படிப்புகள் என்பது Paramedical அதாவது துணை மருத்துவப் படிப்புகள் அல்ல. அது Allied & Healthcare Professional பட்டப்படிப்புகள் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், பிசியோதெரபி பட்டப்படிப்புகளை, துணை மருத்துவப் படிப்புகள் என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது பிசியோதெரபி படிப்புகளையும், பிசியோதெரபி மருத்துவர்களையும் குறைத்து மதிப்பிடும் செயல் என்றும், நீட் தேர்வு என்பது பிசியோதெரபி பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உண்மைகளை, பிசியோதெரபி படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கறிவார்கள். எனவே, நீட் தேர்வு எதிர்ப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் நடத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.