இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது?- வானதி சீனிவாசன்
இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் "B team" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், திரு. விஜய் அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

