“கொழுக்கட்டையும், தேங்காய் முடியையும் சாப்ட்டு திரியிறாங்க..” இந்துகளை விமர்சித்த பாதிரியார்! கொந்தளித்த வானதி

 
வானதி சீனிவாசன்

அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் பழகிவரும் நமது தமிழகத்தில், மதக் கலவரங்களைத் தூண்டும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் பழகிவரும் நமது தமிழகத்தில், மதக் கலவரங்களைத் தூண்டும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால், கோவையைச் சேர்ந்த பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வின், இந்து மதத்தினரை மிகவும் மோசமான வார்த்தைகளால் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துக்களின் மீது மத வெறுப்புணர்வை விதைக்கும் அவரின் கருத்துக்களுக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு மற்றும் தமிழக காவல்துறை. தனது தவறிற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவே இருந்தாலும், ஒருவரின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்திவிட்டு, “மன்னிப்பு” என்ற வார்த்தையால் அனைத்தையும் மறக்கடிக்க முடியாது என்பதுதான் உண்மை. மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கேட்கும் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்களே தவிர, மாநில நிர்வாகம் அல்ல. 


குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைது செய்து, நீதிமன்றம் முன்பு நிறுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமை. எனவே, தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதித்து, அவர்களைப் பற்றி கொச்சையான கருத்துக்களைப் பேசிய கோவை பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வினைக் கைது செய்து, அவருக்கு தகுந்த தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.