பிரதமர் வரும்போது கருப்பு பலூன் காட்டினால், ஸ்டாலினுக்கும் பா.ஜ.க அதையே செய்யும்: வானதி சீனிவாசன்

 
1 1

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

"பிரதமர் வருகையொட்டி அவரை வரவேற்கும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். காவல்துறை பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் மிக கடுமையாக உள்ளது. பாதுகாப்பு முக்கியம் என்றால் கூட அவரை வரவேற்க தொண்டர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுத்து அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும். காவல்துறை ஒத்துழைப்பு விரைவாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. 

விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது என்பது இயற்கை விவசாயம் சார்ந்த விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும். ரசாயனத்தால் மண்ணின் தன்மை மாறி கொண்டு இருக்கிறது. இயற்கை விவசாயம் என்பது முன்னோர்கள் அழைத்துச் சென்றுள்ள கொடை பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் மாநிலத்தின் முதலமைச்சர்கள் கலந்து கொள்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக எதுவாக இருந்தாலும் கூட நாட்டின் பிரதமர் வருகின்ற போது, மாநிலத்தின் முதல்வர் வரவேற்பது என்பது தான் மரபாக இருக்கும். 

இது போன்ற விஷயங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்துறை பட்ஜெட்டில் 80 சதவிகிதம் அறிவிப்புகள் மத்திய அரசின் உதவியோடுதான் நிறைவேற்றுவார்கள். மத்திய அரசின் நிதியை எடுத்துக்கொண்டு மாநில அரசு ஒரு பெயரை வைத்துக் கொள்வார்கள். பிரதமருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்படுவதை பொறுத்தவரை, எந்த போஸ்டர் அச்சடித்தாலும் அதன் பிரிண்டர் யார் என்பது அச்சிடப்பட்டிருக்க வேண்டும். முற்போக்கு அமைப்புகள் என்கின்ற பெயரில் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இரண்டு அமைப்புகளுக்கு இடையில் வன்முறையை தூண்டும் வகையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. 

மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி வர வேண்டும் என்பதற்காக கருப்பு கொடி எல்லாம் காட்டாமல் இருந்தார்கள். ஆனால், தற்போது தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக தி.மு.க கருப்புக்கொடி, கருப்பு பலூன் என்பதையெல்லாம் கையில் எடுத்து உள்ளார்கள். குரங்கு குட்டியை வைத்து சூடு பார்க்கின்ற விதமாக முற்போக்கு அமைப்புகளோ என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் உதவியோடு இதனை செய்கின்றார்களோ என்ற சந்தேகம் உள்ளது. 

பிரிவினைவாத அமைப்புகளுக்கும், முற்போக்கு அமைப்புகளுக்கும் பின்னால் தி.மு.க தான் இருக்கிறது. தி.க-காரர்கள் தான் உள்ளார்கள். கருப்பு பலூன், கருப்புக்கொடி ஆகியவற்றை தமிழக அரசு அனுமதித்தால், தமிழக முதல்வர் எந்த இடத்திற்கு வந்தாலும் பா.ஜ.க-வினரும் இதை தான் செய்வார்கள். மேலும் யார் அந்த நபர்கள் என்று கண்டறிந்து முன்பே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எஸ்.ஐ.ஆரைப் பொறுத்தவரை தி.மு.க அரசு எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இதற்கு அரசே ஸ்பான்சர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் போது, தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் எவ்வாறு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவார்கள்?. கல்லூரி மாணவர்களை தன்னார்வ தொண்டர்களாக சேர்த்து இந்த பணிகளை மேற்கொள்ளலாம். அரசியல் காரணத்திற்காக இதில் ஏதாவது குளறுபடி செய்ய முடியுமா? என நினைக்கிறார்கள். கள்ள வாக்காளர்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? என நினைக்கிறார்கள். கள்ள ஓட்டு போடுவது தி.மு.க-விற்கு பெரிய பலம். அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. அது சிறப்பு மாநிலம் என்பதால் அதற்கு ஒதுக்கப்படும் நிதி சதவீதம் சற்று அதிகமாக தான் இருக்கும்

பிரதமரை வரவேற்க ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்து உள்ளோம். ஏ.பி முருகானந்தம் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகள் யாரும் பிரிந்து செல்லவில்லை. அனைவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை கூட்டணி விஷயங்களை அணுகும். பீகார் வெற்றிக்கு பிறகு பீகார் மாநிலம் போலவே தமிழ்நாடு வருமா என்று மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது, ஆவல் உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வும் சேர்ந்து கலந்து கொள்கிறார்கள். கிளியாக இருப்பது தி.மு.க மட்டும் தான். தி.மு.க-வை எவ்வாறு வீட்டிற்கு அனுப்புவது என்பதுதான் எங்களுடைய நோக்கம்." என்று கூறினார்.