அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 
stalin

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  உலக புத்தக தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

1996 ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

book

இந்த உலக புத்தக தினத்தையொட்டி முதல்வர் தனது ட்விட்டர் பதிவில் அவர், “நல்ல புத்தகங்கள் நல்ல தோழன்! ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!  அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது அரசு மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.