பூஸ்டர் டோஸுக்கு அதிக கட்டணம் - நியாயமற்ற செயல் என அன்புமணி குற்றச்சாட்டு!!
இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் ஜனவரி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்து நேற்று முதல் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் தடுப்பூசி மையங்களில் சேவை கட்டணமாக ரூபாய் 150 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அத்துடன் மூன்றாவது டோஸுக்கு அதிகபட்சமாக ரூ.375 வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கில் தனியார் மையங்களில் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "18 - 60 வயதுப் பிரிவினருக்கு கொரோனா மூன்றாவது(பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இவை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும்; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது! ரூ.375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட சில மருத்துவமனைகளில் பழைய கட்டணமான ரூ.1450 வசூலிக்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் புதிய கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

ஏழைகளால் இவ்வளவு தொகை செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாது! கொரோனா நான்காவது அலை ஜூலையில் தொடங்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஓமைக்ரானின் XE திரிபு பரவத் தொடங்கியுள்ளது. அவற்றைத் தடுக்க அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்! கொரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.


