காலை சிற்றுண்டி திட்டம் : வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த உத்தரவு..

 
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் :

அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக  தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக  உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை வழங்கபடுகின்றன.  

காலை சிற்றுண்டி திட்டம் : வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில்  விரிவுபடுத்த உத்தரவு..
 
தற்போது இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிபடுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம்  18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

 தமிழக சட்டப்பேரவை

இந்நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் விரிவாக்கம் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்   ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.  அதில் வரும் கல்வியாண்டு முதல் 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும்,  அதற்கு ஏதுவாக காலை சிற்றுண்டி தயாரிக்க ஏதுவான இடங்கள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை உடனடியாக தேர்வு செய்யவும்,  ஒவ்வொரு ஊராட்சியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.