#BREAKING : 3வது டி20 கிரிக்கெட்; இந்திய அணி அபார வெற்றி..!!
3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளக்க முடியாமல் திணறியது.
துவக்க வீரர் கான்வே போட்டியின் 3வது பந்திலேயே ஹர்ஷித் ரானா பவுலிங்கில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 2வது ஓவரில் ரச்சின் ரவீந்திராவும் அவுட்டானார். இதனால், 17 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.தொடர்ந்து சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. பிலிப்ஸ் (48), சாப்மேன் (32), சான்ட்னர் (27) மட்டும் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர்.
இதனால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் சேர்த்தது. 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பிறகு, அபிஷேக் ஷர்மாவும், இஷான் கிஷானும் அதிரடியாக விளையாடினர். 3.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 53ஆக எட்டிய போது, இஷான் கிஷான் (28) அவுட்டானார்.
தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர்.அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முதலிடத்தில் இந்திய வீரர் யுவராஜ் சிங் (12 பந்துகள்) இருக்கிறார்.மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் 10 ஓவர்களில் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 68 ரன்னுடனும் (20 பந்துகள்), சூர்யகுமார் யாதவ் 57 ரன்னுடனும் (26 பந்துகள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.


