#BREAKING வடகிழக்கு பருவமழை - தட்டுப்பாடின்றி பால் கிடைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை!
வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அதிலும் நாளை (அக்டோபர் 15) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4,000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 50, 000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும், ஆவடி, அண்ணாசாலை, தியாகராய நகர், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, மாதாவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பாகங்களில் தலா 1000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 500 டன் கால்நடை தீவனம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், 50 டன் பாதுகாப்பு தாது உப்பு கலவை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


